கிரிக்கெட்டிலிந்து தற்போது ஓய்வுபெறும் எண்ணம் இல்லை ஒருவேளை அடுத்த உலகக் கிண்ண போட்டியில் கூட விளையாட வாய்ப்பிருக்கிறது என்று இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சச்சின் மறைமுகமாக கூறியுள்ளார்.
2011 உலகக் கிண்ண தொடரோடு ஒருநாள் போட்டியில் இருந்து சச்சின் ஓய்வுபெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ், உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது சச்சின் கூறியதாவது:
என்னுடைய ஓய்வு குறித்து நான் தான் முடிவு செய்ய வேண்டும். ஓய்வுபெறுமாறு எனக்கு அறிவுரை கூறும் யாரும் என்னை அணிக்கு கொண்டு வரவில்லை என்றார்.
2015 உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் எண்ணம் உள்ளதா என்று கேட்டபோது, நான் விளையாடுவேனா, இல்லையா என்பது குறித்த உங்களின் ஊகத்துக்கு பதிலளிக்க முடியாது என்று தெரிவித்த சச்சின், தற்போது எதையும் உறுதியாகக் கூறிவிட முடியாது.
இதேகேள்வி கடந்த 2011 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவீர்களா என்று 2007ம் ஆண்டு என்னிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிப்பது அப்போது கடினமானதாக இருந்தது. தற்போதும் அதே சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருப்பதால் சாதித்திருக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.
மற்றபடி எல்லாம் கடவுளின் கையில்தான் உள்ளது. போட்டியை ரசித்து விளையாடவே விரும்புகிறேன். இலக்கை நிர்ணயித்து விளையாட விரும்பவில்லை என்றார்.
100 வது சதம் குறித்துப் பேசிய சச்சின், 100 வது சதமடித்ததும் மட்டையை உற்று நோக்கினேன். பின்னர் வானத்தை நோக்கி பார்த்து நான் என்ன தவறு செய்தேன், ஏன் இந்த சதத்தை அடிக்க இவ்வளவு நாட்கள் ஆனது என்று கடவுளிடம் கேட்டேன் என்றார்.
மேலும், இளம் வீரர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு, மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடும், ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டும். நாங்கள் விளையாடத் தொடங்கியபோது எங்களுக்கு லட்சியம் இருந்தது. அதேபோல் வரும் தலைமுறையினரும் விளையாட வேண்டும்.
தற்போது வீராட் கோஹ்லி சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் அதேபோல தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன் என்றார்.




0 comments:
Share your opinion