நடிகர்கள்: சுந்தர் சி, சினேகா, விவேக், சுமன், சிந்து துலானி, செல்முருகன்
இசை:ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு: சூர்யா புரொடக்ஷன்ஸ்
இயக்கம்: கே செல்வபாரதி
எண்பதுகளில் ரஜினி நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற முரட்டுக் காளை படத்தை, ஒரு காட்சி கூட மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள்.
ஆனால் ரஜினி படம் நிகழ்த்திய மாஜிக்கை, சுந்தர் சி காளையனாக வரும் இந்த மாடர்ன் முரட்டுக்காளை நிகழ்த்தியதா? பார்க்கலாம்...
முரட்டுக்காளை கதை ரொம்ப சிம்பிள். பாசமும் வீரமும் நிறைந்த அண்ணன் காளையனுக்கு (சுந்தர் சி), 4 தம்பிகள். ஒருவருக்கொருவர் அத்தனை பாசம். தானுண்டு தன் தம்பிகளுண்டு என போய்க்கொண்டிருக்கும் காளையன் மீது, ஊர் ஜமீன் சுமனின் தங்கை சிந்து துலானிக்கு காதல்.
சுமனின் தோட்டத்தில் வேலை செய்பவரின் கொழுந்தியாளான சிநேகாவை பார்த்த மாத்திரத்தில் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் சுமன். சிநேகா இதற்கு மறுப்புத் தெரிவிக்க.. சிநேகாவின் அக்கா கொல்லப்படுகிறாள். தன்னைத் தேடி வரும் சுமனின் அடியாட்களிடம் இருந்து தப்பிக்க காளையனின் வீட்டில் அடைக்கலமாகிறார் சிநேகா.
இதற்கிடையில் காளையன் சும்மாவே வைத்திருக்கும் நிலத்தில் கனிமம் இருப்பதை அறிந்து அதனை விலைக்கு கேட்கிறார் சுமன். காளையன் தர மறுக்கிறார். இடையில் தனது தங்கை காளையனை காதலிப்பதை அறிந்து, மச்சான் உறவுக்குள் வந்துவிட்டால் சொத்துக்களை ஆட்டைய போட்டுவிடலாம் என்று நினைத்து சிந்துவுக்கும், காளையனுக்கும் திருமண ஏற்பாடு செய்கிறார் சுமன். நிச்சயத்தார்த்த தினத்தன்று இந்த உண்மை தெரிந்து காளையன் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறார்.
சில, பல மோதல்கள், சவால்களுக்குப் பிறகு சிநேகாவை சுந்தர் திருமணம் நடக்கும் தினத்தன்று சுமனின் அடியாளை கொலை செய்த்தாகச் சொல்லி சுந்தரை கைது செய்கிறது போலீஸ். சுமனே கொலை செய்து தன்னை மாட்ட வைத்திருப்பது அறிந்து பாதி வழியிலேயே சுந்தர் போலீஸிடமிருந்து தப்பித்து ஓடுகிறார். அவரைத் தேடி மாவட்ட எஸ்.பி.யே காட்டுக்குள் வருகிறார். அங்கு எஸ்.பி.யை இன்ஸ்பெக்டர் சுட்டுவிட்டு சுந்தர் எஸ்.பி.யை போட்டுத் தள்ளிவிட்டதாகச் சொல்லி போலீஸ் படையை காட்டுக்குள் அனுப்புகிறார். காயமடைந்த எஸ்.பி.யை சுந்தர் காப்பாற்றி அழைத்துச் செல்ல.. சுமன் தனது அடியாட்களுடன் வந்து இவர்களைக் கொலை செய்ய முயல.. முடிவு முன்பே பார்த்ததுதான்..!
முதலில் இந்தப் படத்திற்கு யு சர்டிபிகேட் கொடுத்ததே தவறு.. ஏ சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும்..! அத்தனை டபுள், டிரிபுள் மீனிங் டயலாக்குகளை அள்ளித் தெளித்திருக்கிறார் விவேக். கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால்தான் புரியும் என்றாலும், இதெல்லாம் பெரிசுகளுக்கு ஓகே.. சிறிசுகளுக்கு மனக்குழப்பத்தைத்தான் கொடுக்கும். அதுவும் விவேக் ஏற்றுள்ள திருநங்கை கேரக்டர் அவ்வப்போது அவர்களது கஷ்டங்களை வெளிப்படுத்தினாலும், திருநங்கைகள் என்றாலே இப்படித்தான் பேசுவார்களோ என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. இது எதிர்மறை விபத்தாக போய்விட்டது என்பதை அண்ணன் விவேக் உணர வேண்டும்..!
சுந்தர் சி. வழக்கம்போலத்தான். அவர் ஒரு நல்ல இயக்குநர்.. நடிப்பு இனிமேல் வேண்டாம் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்துவிட்டார்..! சிந்து துலானி பாவம்.. இந்தப் படம் 2009-லேயே வெளிவந்திருந்தால் ஒரு ரவுண்டு வந்திருக்கலாம்.. அந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார். இவருக்குச் சற்றும் குறைவில்லாமல் சிநேகாவும் அப்படியே. நல்லவேளை.. இந்தப் படத்திற்கு பிரஸ் மீட் எதையும் ஏற்பாடு செய்யாமல் விட்டுவிட்டார்கள். தப்பித்தார் சிநேகா. வந்திருந்தால் தர்மசங்கடமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்..!
அப்படி, இப்படியெல்லாம் இல்லாமல் ஸ்ட்ரெயிட்டாக போல்டாக சரோஜா கேரக்டரில் சுருளிராஜன் வேடத்தில், வாய்ஸில் கலாய்த்திருக்கிறார் விவேக். தனது கமெண்ட்ஸ்களை கொஞ்சம் குறைத்து, காட்சியின் விரசங்களையும் நீக்கச் செய்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். இவருக்கும் செல் முருகனுக்கும் இடையில் நடக்கும் அந்த 16 வயதினிலே காதலும். அதைத் தொடர்ந்த காட்சிகளும் கலகலப்பு என்றாலும், ஆத்து சீன் ரொம்ப டூ மச்சுதான்..! அதேபோல் வைக்கோல்போரில் சிநேகா ஒழிந்திருக்கும் நிலையில் சுந்தரும், அவர் தம்பிகளும் செய்யும் லூட்டியும் கண்றாவி.. எப்படி சிநேகா இதற்கு ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.. நல்ல இயக்குநர் செல்வபாரதி.. ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக இந்த அளவிற்கு இறங்கிப் போகணுமா என்ன..?
என்னதான் ஹீரோ, ஹீரோயின்களுக்கு மாற்று ஆட்கள் கிடைத்தாலும் இசைக்கு..???????????? ம்.. நோ சான்ஸ்.. ஒன்லி இசைஞானி இசைஞானிதான்..! பொதுவாக எம் மனசு தங்கம் பாடலை மட்டும் ரீமிக்ஸ் செய்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றபடி சுந்தரபுருஷா பாடலும் கொஞ்சம் கேட்க வைக்கிறது. பாடல் காட்சியில் சிநேகா காட்டியிருக்கும் கவர்ச்சி பார்க்கவும் வைக்கிறது..! ஜோர்..!
ஏற்கெனவே பல முறை பார்த்து, பார்த்து திளைத்துப் போன படம் ரஜினியின் முரட்டுக்காளை என்பதால் இதனை ஒப்பீட்டு பார்ப்பதை தவிர்க்கவே முடியவில்லை. இதனாலேயே படத்தில் பெரும்பாலான நேரங்களில் ஒன்றியிருக்க முடியவில்லை..!
ரஜினி வேடத்தை ரஜினி மட்டுமே செய்ய முடியும் என்பதை எப்போதுதான் கோடம்பாக்கத்தின் சில்லுண்டுகள் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை..! இப்போது என்னுடைய கவலையெல்லாம், ரஜினி இந்தப் படத்தை பார்க்காமல் இருக்கணும் என்பதுதான்..!
சிநேகாவை பார்க்கணும்னா போயிட்டு வாங்க...!